டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 128 ஓவர்களில் 438 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சிறப்பாக விளையாடி 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
தொடக்க வீரரான ரோஹித் 9 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 80 ரன்களும், ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள், 1 சிக்சரும் அடித்து 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 61, இஷான் கிஷன் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினர். அதன் பின் வந்த ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 8 பவுண்டரிகளுடன் 78 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ரோச்சிடம் போல்ட் ஆனார். இந்தியா அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி பெளலிங் சார்பில் அதிகபட்சமாக ரோச் மற்றும் வாரிக்கன் தலா 3 விக்கெட்களும், ஹொல்டர் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடி 71 ரன்கள் சேர்த்த நிலையில், டேகனரின் சந்தர்பால் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் களம் கண்ட கிர்க் மெக்கென்சி 57 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 32 ரன்களுக்கு அறிமுக வீரரான முகேஷ் குமார் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் கிரேக் பிராத்வைட் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின் ஜோசுவா டா சில்வா 10 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது. அலிக் அத்தானாஸ் 3 பவுண்டரிகளுடம் 37 ரன்களிலும், ஹொல்டர் 1 பவுண்டரியுடன் 11 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய பெளலிங் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்களும், முகேஷ் குமார், ஜடேஜா, மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட் சாய்த்துள்ளனர்.
இதையும் படிங்க: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ... ஃபீனிக்ஸ் பறவையாக ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி!!