நாடாளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை போல புதுச்சேரி கடற்கரை பகுதியில் உள்ள சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பிரெஞ்சு தூதரகம் போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்பது குறித்த பயிற்சி காவல் துறையினருக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக தேசிய புலனாய்வு முகமையான என்.எஸ்.ஜி மேஜர் ராஜேஷ் தாக்கூர் தலைமையில் அலுவலர்கள் புதுச்சேரியில் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலைவரை எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவது போல ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை முறியடிக்கும் வகையில் புதுச்சேரி ரிசர்வ் பட்டாலியன் படையின் கமாண்டோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்கள் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை போன்ற பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடுவது என்பது குறித்த பயிற்சி பெற்றனர். டம்மி பாம் மற்றும் டம்மி கண்ணீர் புகை குண்டு வெடிக்கபட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.