புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது மத்திய சிறைச்சாலை. இந்தச் சிறைச் சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 600-க்கும் மேற்பட்டோர் கைதிகளாக உள்ளனர். மேலும் சிறையில் தற்போது ரவுடிகளுக்குள் மோதலும் ஏற்பட்டுவருகின்றது. இதனைத் தடுக்கும் வகையில் பல்வேறு ரவுடிகள் சில நாள்களுக்கு முன்பு வேறு மாவட்ட சிறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில், வில்லியனூர் அடுத்த உத்தரவாகினிபேட் பகுதியைச் சேர்ந்த ரவுடி ரவி என்கின்ற பாம் ரவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தடி அய்யனாருக்கும் முன்விரோதம் காரணமாக சிறைச்சாலையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு தடி அய்யனார், அஜித், தாடி அய்யனார் ஆகியோர் ஒன்று சேர்ந்து பாம் ரவியை கொலைசெய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகின்றது. இதில் காயமடைந்த பாம் ரவியை சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிறைத் துறை கண்காணிப்பாளர் கோபிநாத் அளித்த புகாரின்பேரில், காலாப்பட்டு காவல் நிலையத்தில் தடி அய்யனார், அஜித், தாடி அய்யனார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறையில் இருந்துகொண்டே குற்ற செயலில் ஈடுபட்ட கைதிகள்... நடவடிக்கை எடுத்த கிரண்பேடி