பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கடந்த 15ஆம் தேதி இரவில், மலூரில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்கிலிருந்து சுமார் 57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச்களை ஏற்றிக் கொண்டு டெம்போ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கிடங்கின் ஊழியர்கள் ஜான், பிசல் கிசான் இருவரும் டெம்போவில் சென்றுள்ளனர்.
வாகனம் ஆர்ஆர் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் டெம்போவை வழிமறித்துள்ளனர். மர்ம நபர்கள் ஜான், பிசல் இருவரையும் தாக்கிவிட்டு, வாட்ச்கள் இருந்த வாகனத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், டெம்போவை திருடிச்சென்ற ஜமீர் அகமது (28), சையத் ஷஹீத் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்மார்ட் வாட்ச்களை ஏற்றிச் சென்ற டெம்போ, தங்களது இருசக்கர வாகனத்தை உரசிச் சென்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் டெம்போவை துரத்திச்சென்று, அதிலிருந்து ஸ்மார்ட் வாட்ச்களை கைப்பற்றியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகனத்தில் இருந்த ஸ்மார்ட் வாட்ச்களை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, டெம்போவை ஆர்ஆர் நகர் அருகே விட்டுவிட்டு இருவரும் தலைமறைவானதாகவும் தெரியவந்துள்ளது. கைதான இருவர் மீதும் முன்னதாக எந்தவித வழக்குகளும் இல்லை என்றும், தற்போது இவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.