ஹைதராபாத்: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுவருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தன.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு, அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்றம் அம்மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெற்றோர், ஆசிரியர்கள் என 3,500-க்கும் மேற்பட்டோர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணையில் மனுதாரர்கள் தரப்பில், "கரோனா தொற்றுப் பேரிடர் காலத்தில் லட்சக்கணக்கான மாணாக்கர், பெற்றோர்கள், ஆசிரியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், எந்தவொரு அறிவியல்பூர்வ அடிப்படையும் இல்லாமல், அவசர அவசரமாக இந்த உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும். செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் வகுப்புகளில் கலந்துகொள்ளும்படி மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?