தெலங்கானாவில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று(மே 11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில், நாளை தொடங்கி அடுத்த பத்து நாட்கள்(மே 12- 21) தெலங்கானாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஒரு நாளில் மட்டும் 4,826 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.