தெலங்கானா ஆளுநர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், "2021-ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் இன்பத்தையும், மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை பேரிடர்கள் இல்லாத ஆண்டாகவும், கரோனா எனும் கொடிய நோய் முற்றிலும் ஒழிந்து இயற்கை வளம் மிகும் ஆண்டாக அனைவருக்கும் அமைதி தரும் ஆண்டாகவும் அமைய வேண்டும்.
மேலும் நாம் நம் நாட்டில் தயாரிக்கும் பொருள்களையே பயன்படுத்தி நாட்டின் பெருமையையும், பொருளாதாரத்தையும் உயர்த்துவோம். வேற்றுமை களைந்து ஒற்றுமையோடு அனைவரும் மகிழ்ச்சியோடு புத்தாண்டை கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மத்தியில் ஆளும் மோடி அரசு, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்து, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே குடும்ப அட்டை, ஒரே வேளாண் மண்டலம் என்று எதேச்சதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கின்றது.
உழவர் பெருங்குடி மக்களுக்குப் பெரும் துரோகம் செய்து, வேளாண் சட்டங்கள் எனும் மூன்று நாசகாரச் சட்டங்களைக் கொண்டு வந்து கோடிக்கணக்கான விவசாயிகள் வாட்டி வதைக்கும் பனியிலும், குளிரிலும் தங்களை வருத்திக் கொண்டு போராடுகிற நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தை கடந்த பத்தாண்டு காலமாக வரலாறு காணாத ஊழல் கொள்ளையின் மூலம் அதிமுக அரசு நாசம் செய்து வருகிறது. இந்த ஊழல் ஆட்சி அகற்றப்படவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமையவும் உறுதி எடுத்துக்கொண்டு, தமிழக மக்கள் தீர்ப்பளிக்க கேட்டுக்கொள்வதோடு, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை: இரவு நேர ஊரடங்கு அமல்