தெலங்கானா: தெலங்கானா மாநிலம் கன்சானிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர் ரெட்டி. சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜோகிபேட்டா நகரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடன் வாங்கியுள்ளார். மகசூல் குறைவாக இருந்ததாலும், ஒரு லட்சம் ரூபாய்க்குட்பட்ட கடனை அரசாங்கம் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையாலும் சங்கர் ரெட்டி கடனை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதால், சுமார் 40 ஆயிரம் ரூபாய் கடனை செலுத்தியுள்ளார். மீதமுள்ள கடன் தொகையாவது அரசு தள்ளுபடி செய்யும் என்று அவர் எதிர்ப்பார்த்த நிலையில், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, நிலுவையில் உள்ள கடன்தொகையை வட்டியுடன் செலுத்தாவிட்டால் நிலம் ஏலம் விடப்படும் என சங்கர் ரெட்டிக்கு வங்கி அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கன்சானிபள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பேனர் வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள இஸ்னாபூர் கிராமத்தில் குடியேறினார்.
வங்கி அதிகாரிகளின் இந்த செயலால் இனி யாரும் தனக்கு கடன் தர மாட்டார்கள் என்றும், விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை, அதனால் நிலத்தை ஏலம் விடப்போகிறார்கள் என்றும் விவசாயி சங்கர் ரெட்டி வேதனை தெரிவித்தார். இனி பிழைப்புக்காக கூலி வேலை செய்ய வேண்டும் என்றும் அதற்காகத்தான் இஸ்னாபூருக்கு வந்ததாகவும் சங்கர் ரெட்டி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டெடுப்பு