நாராயணபேட்டா: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் படித்து வந்த முகம்மது டேனிஷ் (15) என்ற சிறுவன், சமீபத்தில் 15 வயதுக்கு கீழ் விளையாடும் தேசிய கால்பந்து அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கால்பந்து குழுமம், சிறுவன் பற்றிய தகவலை குழந்தைகள் நல மையத்திடம் கேட்டது. ஆனால், சிறுவன் குறித்த முழு விவரம் அந்த மையத்திற்கு தெரியவில்லை.
இதனையடுத்து சிறுவனின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் ஆதார் தளத்தில் தேடப்பட்டது. அதில், அச்சிறுவன் தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டா மாவட்டத்தில் உள்ள முகம்மது மொயிஸ் - ஷபானா தம்பதியின் குழந்தை என தெரிய வந்துள்ளது. எனவே உடனடியாக நாராயணபேட்டா மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மஹூபூப்நகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வேணுகோபால் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் சிறுவனை மீட்டனர். தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் சிறுவன், அவரது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சிறுவன் கடந்த 2014, டிசம்பர் 16 அன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து சிறுவனை தேடியும் கிடைக்காததால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மும்பை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். சந்தேகத்திற்கிடமாக இருந்த சிறுவனை மீட்ட ரயில்வே காவல் துறையினர், குழந்தைகள் நல மையத்திடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் போக்சோவில் கைது!