ஹைதராபாத்: இன்று ஹைதராபாத் வருகைதரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, இன்று தெலங்கானா அரசைக் கண்டித்து நடைபெறும் மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.
இது குறித்து தெலங்கானா பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், "பண்டி சஞ்சய் குமார் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து ஜனவரி 4 (இன்று) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஜனநாயகப் படுகொலை
மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெறும் இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஜெ.பி. நட்டா பங்கேற்கவுள்ளார். செகந்திராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து தொடங்கும் இந்தப் பேரணி பாரடைஸ் எக்ஸ் சாலையில் நிறைவடைகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசின் பணிகள் ஒதுக்கீட்டில் மண்டலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தொடர்பான அரசாணை 317-க்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) அன்று மாலை பண்டி சஞ்சய் குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அங்கு வந்த கரீம்நகர் காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
கரீம்நகரில் குமார் கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரைக் காவலர்கள் காவலில் எடுத்தனர். குமார் கைதுசெய்யப்பட்டதை ஜனநாயகப் படுகொலை எனக் குறிப்பிடுகிறார் ஜெ.பி. நட்டா. இது குறித்து அவர், "தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கைதுசெய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது; இது ஜனநாயகப் படுகொலையாகும்.
சட்டம், ஜனநாயக வழியில் பாஜக...
அவர் தன்னுடைய அலுவலகத்தில் கரோனா விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காவல் துறையினர் அவருடைய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.
தெலங்கானாவில் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையும், அங்கு எங்கள் கட்சி வளர்ந்துவருவதையும் காணும் சந்திரசேகர் ராவ் அரசுக்குப் பைத்தியம் பிடித்துப்போயுள்ளது. காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் அனைத்து சட்டம், ஜனநாயக வழியில் செயல்பாடுகளை முன்னெடுப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நாடாளுமன்றத்தில் வேலுநாச்சியாரின் சிலையை நிறுவ வேண்டும் '