ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.30) நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2023-தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 221 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர். மேலும், தெலங்கானாவில் மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 32 ஆயிரத்து 727 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா தேர்தல் களம்: தெலங்கானாவைப் பொறுத்தவரை, முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் என்ற மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் பிஆர்எஸ் கட்சியின் நிறுவனரும், அம்மாநில முதலமைச்சருமான கே சந்திரசேகர் ராவ், காஜ்வெல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து, பாஜகவின் எடெலா ராஜேந்தர் மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில், எடெலா ராஜேந்தர் காஜ்வெல் தொகுதியிலும், ரேவந்த் ரெட்டி காமாரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கேசிஆர்-ஐப் போலவே இவர்கள் இருவரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
அதன்படி, எடெலா ராஜேந்தர் ஹுஜுராபாத் தொகுதியிலும், ரேவந்த் ரெட்டி கோடாங்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னதாக, நடைபெற்ற 2018 சட்டமன்றத் தேர்தலில் காஜ்வெல் தொகுதியில் 58 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார்.
அதேபோல், கேசிஆர்-இன் மகனும், அம்மாநில அமைச்சருமான கே டி ராமா ராவ், சிர்சில்லா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரும், கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் 89 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவின் முக்கிய தொகுதிகள்: காஜ்வெல், ஹுஜுராபாத், கொருட்லா, மகேஸ்வரம், கோஷாமஹால், மஹூப்நகர், எல்பி நகர், வாரங்கல் கிழக்கு மற்றும் மேற்கு, பூபலபல்லி, கைராதாபாத், அம்பெர்பேட், போத், நிர்மல், அதிலாபாத், ராமகுண்டம், பெடபள்ளி, கோதகுடெம், அர்மூர், நிசாமாபாத் அர்பன், படன்சேரு, செரிலிங்கம்பள்ளி, ஹுஸ்னாபாத், துபாக், கல்வாகுர்த்தி ஆகியவை கவனிக்கத்தக்க தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மார்கதர்சி சிட்பண்ட் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு? ஆந்திர சிஐடிக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் கேள்வி