ஐதராபாத் : தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு இன்று (நவ. 30) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையும், பதற்றம் நிறைந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
முதல் முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சங்காரெட்டி மாவட்டத்தில் அதிகபட்சம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜங்கோன் தொகுதியில் பூத் எண் 244ல், பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனினும், போலீசார் தலையிட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதேபோல், நிஜாமாபாத் மாவட்டத்தின் போதன் நகரில் பிஆர்எஸ் - காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். இப்ராஹிம்பட்டிணம் தொகுதிக்கு உட்பட்ட கானாபூர் கிராமத்தில் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே தகராறு ஏற்பட்டது.
போலீஸார் தடியடி நடத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றபடி, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 22% வாக்குகள் பதிவான நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி 37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது 3 மணி நிலவரப்படி 51 புள்ளி 69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்குப்பதிவு முடிய குறைந்த நேரமே உள்ள நிலையில் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : முழு கொள்ளளவை எட்டிய வண்டியூர் தெப்பக்குளத்தின் கண்கவர் கழுகுப்பார்வை காட்சி!