லக்னோ: உத்தர பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், காவல் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியே போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் போலீசாருடன் ஆசிரியர்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏன் திடீர் அறிக்கை?: லக்னோவில் பள்ளி, கல்லூரிகள் மாநில சட்டப்பேரவை உள்பட பாதுகாப்பு நிறைந்த பல விவிஐபி இடங்களுக்கு அருகில் உள்ளதால், அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளை சுற்றியும் கல்வி நிலையங்கள் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறப்படுகிறது. எனவே, பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து எட்டு அறிவுரைகளை போலீசார் அறிக்கையாக அனுப்பியுள்ளது.
டெல்லியை போன்று...: இதுதொடர்பாக காவல் துறை சட்ட ஒழுங்கு பிரிவின் இணை ஆணையர், பியூஷ் மோர்டியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கல்வி நிலையங்கள் மாணவர்களுடன் வரும் பெற்றோர்களின் வாகனங்களை நெறிமுறைப்படுத்த பள்ளி,கல்லூரி வாயிலில் ஒரு பாதுகாவலரை நியமிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, டெல்லியை போன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஆசிரியர் அல்லது நிர்வாக பணியாளரை ஒருவரையும் நியமிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது. பெற்றோர்களின் வண்டிகள் நிற்க வேண்டிய இடத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய வேண்டியது பள்ளி, கல்லூரிகளின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் முடிக்கக்கூடாது எனவும், ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் 20 நிமிட இடைவெளியில் அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆசிரியர்களால் முடியாது': இந்த அறிக்கை குறித்து தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் அனில் அகர்வால்,"பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது போலீசாரின் கடமை.
பள்ளிகளுக்கு அருகே ஏற்படும் போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் தரப்பில் காவலர்களை நியமிக்கலாம். ஆசிரியர்களால் வெளியே நின்று போக்குவரத்து கண்காணிக்க சொல்வது ஏற்றுக்கொள் முடியாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் காதலியின் தலையுடன் போலீசில் சரணடைந்த இளைஞர்