புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலவிவந்த நிலையில், அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வந்தார்.
ஒருவழியாக நாராயணசாமியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த மத்திய அரசு, கிரண் பேடியை துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் விடுவித்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு நாராயணசாமி வரவேற்பு தெரிவித்தார். காங்கிரஸ் தொண்டர்களும் மீண்டும் ஒருமுறை ஆட்சியைப் பிடித்தது போன்று அவ்வளவு மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில்தான் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உறுதி மொழியும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். ஆளுநராகப் பதவியேற்கும் ஒருவர் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பதும் எனக்குத் தெரியும். மக்களின் நலனுக்காகச் செயல்படுவேன். ஆளுநராக இல்லாமல் சகோதரியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு இன்னும் மூன்று மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது செயல்பாடுகளால் அதிகம் எதிர்ப்பை சம்பாதித்த கிரண்பேடியை நீக்கிவிட்டு, தமிழ் தெரிந்த ஒருவரை அம்மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநராக நியமித்திருப்பது புதுச்சேரி மக்களின் வாக்குகளை பெறுவதற்கான பாரதிய ஜனதாவின் ராஜதந்திரமே என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.