புதுடெல்லி: ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, டெல்லி திரும்பி உள்ள பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி பாலம் விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரதமர் மோடியை, டெல்லி பாலம் விமான நிலையத்தில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி எம்.பி. ரமேஷ் விதூரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பிதூரி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதுமட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விமான நிலையத்தின் வெளிப்புறம் குழுமி இருந்தனர்.
ஜப்பானில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். பின் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, சிட்னியில் மிக பிரமாண்ட விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றினார். பயணத்தை நிறைவு செய்த நிலையில், நேற்று(மே 24) மாலை இந்தியா புறப்பட்டார். இன்று (மே25) காலையில் வந்து சேர்ந்த பிரதமரை டில்லியில் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து பாஜ சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற போது உலக தலைவர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து பேசியதை நினைத்து மகிழ்கின்றேன். ஜி-20 மாநாடு குறித்தும் அனைவரும் பாராட்டி பேசினர். இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.
இந்த சந்திப்பில் எனது முழு நேரத்தையும் இந்தியாவின் பெருமைக்காகவே நாட்டின் நலனுக்காக செலவழித்தேன். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா எடுத்த முயற்சிகள் மற்றும் தடுப்பூசியை பலரும் பாராட்டினர். இந்தியா புத்தர் ,காந்தி பிறந்த மண். நாம் எதிரிகளுக்காகவும் கவலைப்படுகிறோம். ஏனெனில் நாம் இரக்கம் கொண்டவர்கள் ஆவர்.
உலகமே இந்தியாவை உற்று நோக்கி கவனிக்கிறது. இந்தியாவின் பெருமையை நினைந்து பார்க்கிறது. இந்திய கலாசாரத்தை உலகம் போற்றுகிறது.என்பதை இந்த வெளிநாட்டு பயணத்தில் உணர முடிந்தது. இன்று இந்த உலகமே இந்தியா என்ன நினைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது. நமது நாட்டின் கலாசாரம் பற்றி பேசும்போது, உலக நாடுகளின் பார்வையை நான் பார்க்கிறேன். நாட்டில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததாலே இந்த நம்பிக்கை வந்துள்ளது. அங்கு வந்திருந்தவர்கள் மோடியை நேசிப்பவர்கள் அல்ல, இந்தியாவை நேசிப்பவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' புத்தகத்தின் டோக் பிசின் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழா குறித்து பேசிய பிரதமர் மோடி, ``தமிழ் மொழி நம்முடைய மொழி. இது ஒவ்வொரு இந்தியனின் மொழி மற்றும் உலகின் பழமையான மொழி" என்றார்.