டெல்லி: ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள, இந்துக்கள், சீக்கியர்கள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவுடன் தான் பேசிவருவதாக அக்குழுவின் டெல்லி தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "கஜினி, ஜலாலாபாத்தில் வசிக்கும் 320க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர்(50 இந்துக்கள் மற்றும் 270க்கும் மேற்பட்ட சீக்கியர்கள்) காபூலில் உள்ள குருத்வாராவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனை காபூல் குருத்வரா கமிட்டித் தலைவர் என்னிடம் கூறினார். அண்மையில், குருத்வரா கமிட்டித் தலைவர்களைச் சந்தித்த தாலிபன் தலைவர்கள் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உறுதியளித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், ராணுவ, அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்தியர்களும், சீக்கியர்களும் அங்கு பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் இந்தியத் தூதர், தூதராகத்தில் பணியாற்றிய அலுவலர்கள் பாதுகாப்பாக இன்று நாடு திரும்பினர். ஒன்றிய அரசின் உத்தரவின்பேரில், காபூல் பறந்த ராணுவ விமானம், அவர்களை அழைத்துக்கொண்டு பாதுகாப்பாக குஜராத் ஜாம்நகர் விமான தளத்தில் இன்று தரையிரங்கியது.
ஆப்கானுக்கான இந்தியத் தூதர் ருத்ரேந்திர டாண்டன் பாதுகாப்பாக அழைத்து வந்த இந்திய விமானப் படைக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கானியைவிட தாலிபன்கள் ஆட்சி சிறப்பு - ரஷ்யா