தெலங்கானா : ஐதராபாத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 72 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக தம் பிரியாணியை பலர் விரும்பி வாங்கியதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.
தற்போது ஈரான் என அழைக்கப்படும் முந்தைய பெர்சிய நாட்டின் உணவான பிரியாணி என்றாலே அனைவருக்கும் கொள்ளை பிரியம். நாட்டின் தேசிய உணவு என்பது போல பிரியாணி அனைவராலும் கூறப்படுகிறது. பெர்சிய நாட்டின் வணிகர்களால் அரேபியா, தெற்காசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த பிரியாணி படையெடுத்து வந்தது.
என்ன தான் பெர்சியா நாட்டில் இருந்து பிரியாணி உணவு மற்ற நாடுகளுக்கு பரவியதாக கூறப்பட்டாலும், தற்போது நாம் சாப்பிடும் பிரியாணி வகைகள் முற்றிலும் உள்நாட்டில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரியாணி சீரக சம்பா மற்றும் பாஸ்மதி அரிசி வகைகளில் தயார் செய்யப்படுகிறது.
திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரியாணி போடுவது என்பது தற்போதைய கலாசாரமாக மாறி வருகிறது. அந்த வகையில் பிரியாணிக்கு மக்கள் அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம். பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வகையாக பிரியாணி தயார் செய்யப்பட்டாலும், சில வகை பிரியாணிகளை மக்கள் இன்னும் ருசிக்க தவறி வருகின்றனர் என்று கூறலாம்.
அப்படி ருசிக்க தவறியவர்களுக்கு ஊன்று கோலாக இந்த உணவு டெலிவிரி நிறுவனங்கள் வந்து உள்ளன. இந்த உணவு டெலிவி நிறுவனங்களால் ஒரு இடத்தில் இருக்கும் உணவகத்தின் பிரியாணி சுவையை மற்றொரு இடத்தில் இருப்பவர் எளிதில் ருசிக்க முடிகிறது. அதேநேரம் முக்கிய விழாக்கள், புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் இந்த உணவு டெலிவிரி நிறுவனங்களில் பிரியாணி ஆர்டர் வந்து குவிகிறது.
அந்த வகையில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஐதராபாத்தில் 72 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதிலும் அதிகபட்சமாக தம் பிரியாணியே மக்கள் அதிகம் விரும்பும் பிரியாணி வகைகளின் பட்டியலில் இருப்பதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஜூலை 2ஆம் தேதி நாளை உலக பிரியாணி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த தரவுகளை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணி வகைகளை காட்டிலும் நடப்பு 2023 ஆம் ஆண்டில் பிரியாணி ஆர்டர்களின் எண்ணிக்கை 8 புள்ளி 39 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினர்களுக்கு இவ்வளவு சம்பளமா? இதில் சம்பள உயர்வு வேறையா?