ஹரித்வார்(உத்தரகாண்ட்): சங்கரச்சாரிய பரிசத்தின் தலைவரும் காளி சேனாவின் நிறுவனருமான சுவாமி ஆனந்த் ஸ்வரூப், சிறையில் உள்ள ஜித்தேந்திர நாராயண தியாகிக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அவரின் உயிருக்கு பாதிப்பு இருப்பதாகவும், ஆகையால் சிறை நிர்வாகம் மற்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உடனடியாக அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிறை எஸ்.பி மனோஜ் குமார் ஆர்யா கூறுகையில், “ அனைத்து கைதிகளுக்கும் அளிக்கப்படும் வசதிகள் தான் ஜித்தேந்திர நாராயண தியாகிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஹரித்வார் மாவட்ட சிறையில் எந்த வித ஆபத்தும் நிகழாது என நாங்கள் உறுதியளிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
ஹரித்வார் மாவட்ட சிறைக்கு செல்வதற்கு முன்பு தனது உயிருக்கு சிறையில் எந்தப் பாதிப்பும் ஏற்படலாம் என காணொலி ஒன்றை அவர் வெளியிட்டார்.
உத்தரப்பிரதேச ஷியா வஃபு போர்டின் முன்னாள் தலைவரான வசிம் ரிஷ்வி எனும் ஜித்தேந்திர நாராயண தியாகி நேற்று(செப்.2) தனக்கு உச்ச நீதிமன்றம் அளித்த நிபந்தனை பிணைக் காலம் முடிந்த நிலையில் ஹரித்வார் மாவட்ட சிறையில் சரணடைந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சாத் நிகழ்வில் கொச்சையாகப் பேசியதாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி இவர் மீது நதீம் அலி என்பவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஜித்தேந்திர நாராயண தியாகி ஹரித்வார் சிறையில் நான்கு மாதங்கள் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தன்னுடைய மோசமான உடல்நிலையைக் காட்டி ஓர் கோரிக்கை மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அளித்தார். இருப்பினும் தியாகிக்கு பிணை கிடைக்கவில்லை.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகியதன் மூலம், இனி இது போன்ற பேச்சுகளைப் பேசக் கூடாது என நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்தப் பிணையால் தியாகி ஹரித்வார் சிறையிலிருந்து நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிணையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2024 மக்களவைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - நிதிஷ்குமார்