கடந்த சில மாதங்களாகவே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கட்சி தலைமையுடன் மாற்று கருத்து கொண்டிருந்தார். கட்சியின் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்த அவர், கடந்த மாதம் அமைச்சரவையிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஜகவில் இணைகிறாரா அதிகாரி?
இந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்குவங்கம் செல்லவுள்ளார். அப்போது, அவரது முன்னிலையில் அதிகாரி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரியின் சொந்த ஊரான மித்னாபூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் அக்கட்சியில் இணையவுள்தாகக் கூறப்படுகிறது.
மல்தா, முர்ஷிதாபாத், புருலியா, பங்குரா, மேற்கு மித்னாபூர் ஆகிய பகுதிகளின் பொறுப்பாளராக இருந்த அதிகாரி, உள்ளூர் தலைவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். செல்வாக்கு மிக்க அவரை கட்சியில் வைத்துக்கொள்ள திரிணாமுல் சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் கட்சியிலிருந்து விலகும்பட்சத்தில் அடுத்தாண்டு தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்தது. இதனால் அதிகாரி அதிருப்தியில் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.