டெல்லி: ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவில் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவதாக கூறி விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது பாஜகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப திடீரென தூசி தட்டப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 23ஆம் தேதி, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக இந்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, உடனடியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி மக்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று(ஏப்.13) விசாரணைக்கு வந்தது. இதில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகினார்.
அப்போது, சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் கோரப்பட்டது. இன்றைய விசாரணை முடிந்து வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைக்கு இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "ஒரு தியாகியின் மகனை துரோகி என்று கூறுவதா?" - பிரியங்கா காந்தி ஆவேசம்!