டெல்லி: இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், "மாத்திரைகளை பரிந்துரை செய்வதற்காக, மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வது ஒரு அடிப்படை உரிமை, அதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய, நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் நடைமுறைகளைப் முறையாக பின்பற்றுவது முக்கியம். இதுபோன்ற நடைமுறைகளை கட்டுப்படுத்த தற்போது எந்த சட்டமும் இல்லை. இலவசங்களுக்காக குறிப்பிட்ட மருந்துகளை மக்களுக்கு பரிந்துரை செய்வது மிகவும் ஆபத்தானது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கரோனா காலத்தில் டோலோ650 மாத்திரையை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்கள் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், இது மிகவும் தீவிரமான பிரச்சினை என தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு 10 நாட்களுக்குள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் சிறை கைதி கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை