டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள், நான்காவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் இன்று(டிச.1) விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.
அவர் கூறும்போது, "விலங்குகளுக்கென தனி உரிமை உண்டு. அதை பாதுகாப்பது கடமையென்று முந்தைய நாகராஜ் வழக்கின் தீர்ப்பு கூறுகிறது. அவ்வாறு உரிமை என்பது இல்லை. ஆனால், விலங்குகளுடனான உறவு என்பது உண்டு. அவற்றுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிக்க மாட்டோம் என்பதே உண்மை.
நாகராஜ் வழக்கில் ஜல்லிக்கட்டு நடக்கும்போது என்ன கள நிலவரம் என்பது தொடர்பாக 2013-ல் விலங்குகள் நல வாரியம் 3 அறிக்கைகளை அளித்தது. அதன் அடிப்படையில் நாகராஜ் வழக்கில் தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை வேறு. உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை.
தனி நபர்கள் பலரும் ஜல்லிக்கட்டு நடத்தி, காளைகளை கொடுமைப்படுத்தி, விதிகளை மீறுவதாக மனுதாரர்கள் குற்றச்சாட்டை வைத்தால், முதலில் அவர்கள் விலங்குகள் நல வாரியத்தை அணுகி கோரிக்கை வைக்க வேண்டும் அல்லது வழக்கு தொடர வேண்டும், நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது.
பீட்டா அமைப்பிடம் வெறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே இருக்கின்றன. வீடியோ, செய்தி உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. எனவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
இதையும் படிங்க:ராமன் பக்தனை ராவணனுடன் ஒப்பிடுவதா? - கார்கேவுக்கு பிரதமர் மோடி பதில்!