டெல்லி : ஊடகங்களால் நீதித் துறை நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், எந்த நேரத்தில் வழக்கு தொடர்பான ஆதாரங்களை போலீசார் வெளியிட வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஊடக சந்திப்புகளின் போது போலீசார் வெளிப்படுத்த வேண்டிய வழக்கின் உண்மைத் தன்மை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், ஒரு சில வழக்குகளில் போலீசார் வெளியிடும் குற்ற அறிக்கைகள் ஒரு தலைப்பட்சமான முறையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட நபர் குற்றம் செய்துள்ளாரா என்ற சந்தேகத்தை பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அந்த அறிக்கைகள் இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
கிரிமினல் வழக்குகள் தொடர்பாக போலீசார் ஊடகங்களை சந்திப்பதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர். மேலும், கிரிமினல் வழக்குகள் தொடர்பாக போலீசார் ஊடக சந்திப்பு குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க அனைத்து மாநில காவல் துறை தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும், குற்றஞ்சாட்டபவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக் கூடாது என்றும், எந்த கட்டத்தில் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். நீதிமன்ற நிர்வாகம் ஊடக விசாரணைகளால் பாதிக்கப்படுவதாகவும் இது மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.
வழக்கு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை கொண்டு இருப்பதால், இது போன்ற விஷயங்களில் ஊடகங்களின் அறிக்கை பொது நலன் கருதும் வகையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும் வழக்கு விசாரணையில் இருக்கும் போதே ஊடக சந்திப்புகளை நடத்துவது தொடர்பாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : "சாலை பாதுகாப்பு சமூக சமநிலையை கொண்டிருக்க வேண்டும்.. ஓட்டுநர் உரிமம் பெறுவதில் சட்ட திருத்தம் தேவையா?" - உச்ச நீதிமன்றம்!