டெல்லி : பங்குச் சந்தையில் அதானி குழுமம் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையை விசாரிக்க இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்திய தொழில்துறையில் கோலோச்சி வரும் அதானி குழுமத்திற்கு எதிராக ஒரு அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதில் அதானி குழுமம் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வரி மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ் போன்ற வரி விலக்கு நாடுகளில் உள்ள போலியான ஷெல் கம்பெனிகளுக்கு மாற்றி, அங்கிருந்து மீண்டும் அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, செயற்கையாக அந்நிறுவன சந்தை மதிப்பை, இந்திய பங்குச் சந்தையில் உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பங்குச் சந்தையில் அதானியின் பங்கு மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்வரிசையில் இருந்த அதானி தொடர் சரிவின் காரணமாக அதளபாதாளத்திற்கு இறங்கினார். மேலும் எதிர்கட்சிகள் அதானி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்தை முடக்கின.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கின. இந்நிலையில், அதானி முறைகேடு புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 2ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த இந்திய பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபிக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதனிடையே ஹிண்டன்பர்க் ஆய்வு குறித்து விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டது.
கூடுதல் கால அவகாசம் வழங்குவதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அதானி முறைகேடு குறித்து செபி விசாரித்து வருவதாகக் கூறிய நிலையில், அறிக்கையைத் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் ஏன் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து செபியின் கால அவகாசம் வழங்குவது குறித்த மனுவை ஜூலை 10ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செபி புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது. அதில், 51 இந்திய நிறுவனங்கள் வெளியிட்ட உலகளாவிய வைப்பு நிதி ரசீதுகள் தொடர்பாக விசாரித்து வருவதாகவும்; அதில் அதானி குழுமத்தின் அறிக்கைகள் குறித்து ஏதும் விசாரிக்கப்படவில்லை என செபி தெரிவித்து உள்ளது.
மேலும் 2016ஆம் ஆண்டு முதல் அதானி பரிவர்த்தனை குறித்து விசாரித்து வருவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள 12 பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வருவதாகவும், அவை மிக சிக்கலானதாகவும் ஆய்வு செய்ய அதிகம் நேரம் தேவைப்படுவதாகவும் செபி தெரிவித்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் படி அதிக வரம்புகளுக்கு உட்பட்ட பல துணை பரிவர்த்தனைகள் உள்ளதகாவும் அந்தப் பரிவர்த்தனைகள் குறித்து ஆழமான விசாரணை நடத்த உள்ளூர் மற்றும் சர்வதேச வங்கிகள், நிதி நிறுவனங்களின் பரிவர்த்தனை அறிக்கைகள், உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அவைகளை பெற்று விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு முதலீட்டாளர்களின் முதலீடு சார்ந்த ஆய்வு என்பதால் அவசர கதியாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடியாது என செபி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து செபி கேட்ட 6 மாத கால அவகாசத்தை நிராகரித்த நீதிபதிகள் 3 மாதங்கள் வழங்கினர். மேலும், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள், அதானி குழும முறைகேடு குறித்த ஆய்வு அறிக்கைகளை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினர்.
இதையும் படிங்க : புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழரின் பாரம்பரிய உடையில் தோன்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்