ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ஆம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் சாந்தன், நளினி, முருகன் மற்றும் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் 2014-ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதேநேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே 18-ஆம் தேதி அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.
பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது போலவே நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 ஆண்டுகள் நடந்தது என்ன? - விரிவான தகவல்