டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற வழக்குகளில் அதிக கவனம் பெற்ற தீர்புகள் பின்வருமாறு,
சட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பெற்ற இந்த வழக்கில், டிசம்பர் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது, அதனை ரத்து செய்தது செல்லும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும். 2024ஆம் ஆண்டு செம்டம்பர் மாத இறுதிக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி மாநிலமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்வு வழங்கியது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண அங்கீகார வழக்கு: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் கோரிய வழக்கினை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு 10 நாட்களாக விசாரித்து, அக்டோபர் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது. சட்டத்தில் உள்ள சரத்துக்களை சீராய்வுதான் செய்ய முடியும். சிறப்பு திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றால், அது நாடாளுமன்றம்தான் செய்ய வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது குடிமக்களின் நலனைப் பாதிக்கும் என தீர்ப்பளித்தது.
26 வார கருவைக் கலைக்க அனுமதி: திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், பேறுகாலத்திற்கு பின்னரான மன அழுத்தம் மற்றும் நிதி நிலைமை காரணமாக தனது 26 வார கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அக்டோபர் 9ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதி அடங்கிய அமர்வு, பெண்ணின் மனுவிற்கு அனுமதி வழங்கிய நிலையில், குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், அரசுத் தரப்பில் ரீகால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அக்டோபர் 11ஆம் தேதி விசாரிக்கப்பட்ட இந்த ரீகால் மனுவில், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிபதிகள் அடங்கிய அமர்வுக்குச் சென்றது.
அக்டோபர் 16ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதி அமர்வு, கரு கலைப்பதற்கான கால அளவான 24 வாரத்தை இந்த கரு கடந்து விட்டது. கருவில் வளரும் குழந்தைக்கு அசாதாரணச் சூழல் இல்லை. எனவே இந்த கருவை கலைக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து, குழந்தையை அரசு பராமரிக்கும் எனத் தீர்ப்பளித்திருந்தது.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி: 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவில் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி பெயர் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ராகுல் காந்தியின் கருத்து மோடி சமூகத்து மக்களின் உணர்வுகளை புன்படுத்தியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து செஷன்ஸ், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் அவர் மட்டுமன்றி, அந்த தொகுதி மக்களின் நலனும் பாதிக்கப்படுகிறது எனக் கூறி, தண்டனைக்கு தடை விதித்தது. மேலும், பொது வாழ்வில் இருக்கக்கூடிய நபர் பொது வெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் செய்தது.
மகாராஷ்டிரா ஆளுநர்: மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான ஆட்சியில் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, மகாராஷ்டிராவில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அதனால் ஆட்சி கவிழ்ந்ததை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தன்னுடைய நடவடிக்கை அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றால், ஆளுநர் அந்த பக்கம் செல்லக் கூடாது. ஆளுநர் அரசியலில் தலையிடக் கூடாது எனத் தெரிவித்தது.
விவாகரத்து வழக்கு: இந்து திருமணச் சட்டப்படி விவாகரத்து கோரும் தம்பதிகள் 6 மாதகாலம் காத்திருக்க வேண்டும். இதில் தம்பதிகளிடம் விவாகரத்து பெறுவதில் பரஸ்பர ஒற்றுமை இல்லையெனில், விவாகரத்து பெறுவதில் கால தாமதம் ஏற்படும். இதில், பரஸ்பர விவாகரத்துகளில் தம்பதிகள் 6 மாத காலம் காத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் மே மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு வழங்கியுள்ள 142வது சட்டப்பிரின்படி, பரஸ்பர விவாகரத்து கோருபவர்களுக்கு நீதிமன்றங்கள் கட்டாய ஆறு மாத கால அவகாசத்தில் இருந்து விலக்கு அளித்து விவாகரத்தினை அறிவிக்கலாம் எனத் தெரிவித்தது.
டெல்லியில் அதிகாரம் யாருக்கு? டெல்லியில் ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கானது என மோதல் நிலவியது. இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ஜனநாயக நாட்டில் துணை நிலை ஆளுநரை விட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருக்க வேண்டும்.
காவல்துறை, நில நிர்வாகம், பொது ஒழுங்கு ஆகியவற்றுடன் ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது என தீர்ப்பளித்து இருந்தது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர் மாநில அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டு போடும் நிலையில், டெல்லி ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாட்டின் கவனத்தைப் பெற்றது.
பண மதிப்பு நீக்க வழக்கு: 2016ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கு எதிரான 58 மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து, ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது.
பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ரிசர்வ் வங்கியிடமும் மத்திய அரசு ஆலோசித்து இருப்பதால், பணமதிப்பிழப்பு முடிவை திரும்பப் பெற முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்து இருந்தது.
தேர்தல் ஆணையர் நியமனம்: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் மத்திய அரசுக்கு சாதகமானதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அரசியல் சாசன அமர்வு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்குப் பதிலாக கேபினட் அமைச்சர் இடம்பெறுவார் என நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போபால் விபத்து இழப்பீடு விவகாரம்: 1984ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1989ஆம் ஆண்டு வழக்கின்போது அமெரிக்க நிறுவனம் வழங்கிய 470 மில்லியன் அமெரிக்க டாலருடன் கூடுதலாக 7 ஆயிரத்து 844 கோடியை மத்திய அரசு கோரியது.
மார்ச் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மடங்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் மீதமுள்ள 50 கோடியை இழப்பீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்திய நீதிமன்றம், விஷவாயு விவகாரத்தை மீண்டும் எழுப்பினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக முடியும் எனக் கூறி, மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: உலகை உலுக்கிய சம்பவம்; 2023ஆம் ஆண்டின் மறையா வடுவான மணிப்பூர் வன்முறை!