டெல்லி : சாலை பாதுகாப்பு சட்டம் சமூக நோக்கத்தின் சமநிலையை கொண்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சட்ட திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர், குறிப்பிட்ட எடையிலான வாகனத்தை ஓட்ட அனுமதிக்கப்பட்டவரா என்ற மனுவை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சாலை பாதுகாப்பு என்பது சமுதாய இலக்கின் சமநிலையை ஒத்ததாக இருக்க வேண்டும் என்றும் சமூக கொள்கைக்கு அரசியல் சாசன அமர்வில் தீர்வு காண முடியாது என்று கூறினர்.
மேலும், வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சாலை பாதுகாப்பு என்பது சட்டத்தின் பிரச்சினை மட்டுமல்ல, சட்டத்தின் சமூக தாக்கமும் கூட என்றும் சாலைப் பாதுகாப்பு என்பது சட்டத்தின் சமூக நோக்கத்துடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கொள்கை பிரச்சினைகள் என்றும், இந்த விவகாரம் அரசின் கொள்கை அளவில் எடுக்கப்பட வேண்டியிருப்பதால், மத்திய அரசு இதுகுறித்து ஆராய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசியல் சாசன அமர்வில் சமூக கொள்கை பிரச்சினைகளை முடிவு செய்ய முடியாது என்றும் இந்த விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்த பிறகு அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் எதன் அடிப்படையில் பணிபுரிகிறார்கள் என்றும், இது அரசியலமைப்பு பிரச்சினை அல்ல முற்றிலும் சட்டப்பூர்வ பிரச்சினை என்றும் நீதிபதிகள் கூறினர். முன்னதாக, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 7 ஆயிரத்து 500 கிலோவுக்கு மேல் இல்லாத போக்குவரத்து வாகனங்கள் இலகு ரக மோட்டார் வாகன வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் நடந்த வழக்கு விசாரணையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.a
இதையும் படிங்க : அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து.. ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது!