மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாளை(ஜூன் 30) சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. முன்னதாக 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என ஆளும் சிவசேனா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது எம்.எல்.சி பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, தனது ஆட்சி திறம்பட நடக்க உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.