டெல்லி: அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை மனு குறித்து விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் கடந்த மாத இறுதியில், இந்திய தொழில்துறையில் கோலோச்சி வரும் அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டது. அதில் அதானி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ் போன்ற வரி விலக்கு நாடுகளில் உள்ள போலியான ஷெல் கம்பெனிகளுக்கு மாற்றி, அங்கிருந்து மீண்டும் அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, செயற்கையாக அந்நிறுவன சந்தை மதிப்பை, இந்திய பங்குச் சந்தையில் உயர்த்தியதாக ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது பங்குச் சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் அசுர வேகத்தில் வீழ்ச்சியை சந்தித்தன. மேலும் உலக பணக்காரர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த அதானி, பெரும் சறுக்கலை சந்தித்தார். 20 இடங்களுக்கும் மேல் பின்னோக்கி சென்றார்.
அதானி பங்குகள் வீழ்ச்சியால் பங்குச் சந்தை குறியீடு கீழ்நோக்கி பாய்ந்தது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. குடியரசுத் தலைவரின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் அதானி விவகாரத்தை அனைத்து கட்சி அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டுமென தொடர் போராட்டம் நடத்தினர்.
மேலும் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, விஷால் திவாரி ஆகியோர் அதானி குழும விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே தலையிட்டு விசாரிக்க வேண்டி மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்கக் கோரிய வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவை நாளை (பிப்.10) விசாரிக்கவுள்ள நிலையில், அத்தோடு சேர்த்து இந்த மனு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கபடி விளையாட்டின் போது மாரடைப்பால் உயிரிழந்த 19 வயது வீராங்கனை!