கொல்கத்தா (மேற்கு வங்கம்): வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்று 'யாஷ் புயல்'ஆக மாற வாய்ப்பிருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் தீவிரமடைந்து மே 23 முதல் மே 25 ஆகிய தேதிகளுக்கிடையில், தீவிரப் புயலாக மாறி மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகள் உள்ள பகுதிகளை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இருப்பினும், சுந்தரவனக் காடுகள் வழியாக நிலத்திற்குள் நுழையும் புயல், வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 23ஆம் தேதி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் 5 டிகிரி அளவு கூடுதல் வெப்பம் உணரப்படுகிறது. இது மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் கணித்துள்ளனர்.
முன்னதாக அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த புயலானது நேற்று முன்தினம் (மே 17) இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. கடும் புயல் உருவானதால் புயலை எதிர்கொள்வதற்காக குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையிலும் 13 பேரின் உயிரை புயல் பறித்தது.
மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 2020ஆம் ஆண்டு கொல்கத்தாவை 'அம்பன் புயல்' 260 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது. இதன் தாக்கம் அப்போது 5 நாட்கள் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.