டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற மோசடி வழக்கில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் கைலாஷ் கெலாட், சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது புகார் அளித்து மூன்றாவது கடிதத்தை டெல்லி ஆளுநர் வினய் குமாருக்கு எழுதியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன், சுகேஷ் சந்திரசேகர் எழுதிய மற்றொரு கடிதத்தில், “ஏன் நீங்கள் ஜெயினுடன் ஹயாட்டில் நடந்த எனது இரவு விருந்தில் கலந்து கொண்டீர்கள்? அசோலாவிலுள்ள கெஹ்லோட்டின் பண்ணை வீட்டில் வைத்து நான் தந்த 50 கோடி ரூபாயை ஏன் பெற்றுக்கொண்டீர்கள்?
நான் நாட்டின் பெரும் பயங்கரவாதி என்றால் எதன் அடிப்படையில் நீங்கள் என்னிடம் 50 கோடி ரூபாயை வாங்கி எனக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக சொன்னீர்கள்...? ” என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு என பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று எழுதியுள்ள மூன்றாவது கடிதத்தில், ”தான் முதலில் எழுதிய கடிதம் வெளியான பிறகு, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சிறைத் துறை டிஜி சந்தீப் கோயல் ஆகியோர் தனக்கு சிறையில் நெருக்கடி தருகின்றனர். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான புகாரை விசாரிக்க, சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனை சுகேஷின் வழக்கறிஞர் ஏ.கே.சிங் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சருக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் தகவல்!