நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்.08) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அதில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது, தேவையான இடங்களில் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக சுகாதார வல்லுநர்கள், உயர் அலுவலர்களுடனும் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எவ்வாறு பதிலளித்திருப்பார் எனக் கற்பனை செய்து, அவரை கேலி செய்யும் வகையில் பாஜக மாநிலங்களைவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
அதில் ”ஏன் இரவு எட்டு மணி முதல் ஏழு மணி வரை ஊரடங்கு?” என்ற கேள்விக்கு, ”கோடை காலத்தில் பகல் வேளையில் வெப்பநிலை அதிகரிக்கும். ஆனால் இரவில் குளிர்ச்சியாக இருக்கும்போது கரோனா வைரஸ் வெளியேற விரும்பும். எனவே அப்போது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது” என்று மோடி பதிலளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
மேலும், ”கும்பமேளா பாதுகாப்பானதா?” என்ற கேள்விக்கு, “ஆம். கரோனா கடவுளுக்கு பயப்படும். ஆகையால் கடவுளை வழிபடக் கூடும் லட்சக்கணக்கான மக்களை அது பாதிக்காது” என மோடி பதிலளிப்பது போல் கேலி செய்து அவர் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உண்மையாகவே இதுபோன்று பதிலளித்துள்ளாரா என பலரையும் குழப்பும் வகையில் சுப்பிரமணியம் சுவாமியின் இந்த ட்வீட் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மம்தாவின் கோட்டையில் களமிறங்கும் அமித்ஷா!