புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு திடலில் அமர்ந்து கொண்டு செல்போனில் பப்ஜி, வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற பாகூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் அருள்மணி, அவர்களை அழைத்து விசாரித்த போது, நேரம் போகாததால் செல்போனில் கேம் விளையாடுவதாக தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களது செல்போனைகளை வாங்கி ஓரமாக வைத்த உதவி ஆய்வாளர் அருள்மணி, செல்போன்களுக்கு, ஒரு காவலரை பாதுகாப்புக்கு நிறுத்தி விட்டு, மாணவர்கள், இளைஞர்களிடம் கைப்பந்தை கொடுத்து, அவர்களை இரு அணிகளாகப் பிரித்து, கைப்பந்து விளையாட சொன்னார். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தருவதாகவும் ஊக்கமளித்தார்.
உதவி ஆய்வாளரின் இந்த செயலை முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் தொடங்கி வைத்த கடல் விமான சேவை ஒரு மாதத்தில் நிறுத்தம்?