ரயில்வே வாரியத்தின் NTPC பிரிவுகளுக்கான பணியிட தகுதித் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகின. இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
குறிப்பாக இவ்விவகாரம் பிகார் மாநிலத்தில் பூதாகரமாக மாறியுள்ளது. அம்மாநிலத்தில் மாணவர்கள் கடந்த சில நாள்களாக பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல இடங்களில் ரயில் மறியல், ரயில்வே அலுவலகங்கள் முற்றுகை போன்றவற்றை அவர்கள் மேற்கொண்டனர்.
ஒரு சில இடங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகம் "தேர்வெழுதியவர்களின் கோரிக்கை அனைத்தையும் அறிந்து, அதை அறிக்கையாகத் தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட குழுவிடம் சமர்ப்பிக்க ரயில்வே தேர்வாணையத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இதற்காக மின்னஞ்சல் முகவரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை(ஜன 28) முழு அடைப்பு(பந்த்) நடத்த மாணவர்கள் சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன. அரசின் விளக்கம் வெறும் கண்துடைப்பு என போராட்டகாரர்கள் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சித் தலைவருக்கு 'யோகி' மிகவும் பொருத்தமானவர் - ராகேஷ் திகாயத் கிண்டல்