தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு சமீபகாலமாக அபாயகர அளவைத் தாண்டி வருகிறது. இது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. இது வரும் நாள்களில் மிகவும் கடுமையாக மாறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
டெல்லியை உள்ளடக்கிய தேசியத் தலைநகர் பகுதியில் மாசுபாடு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது நிறுத்தப்பட்டபோதிலும் டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இயற்கை எரிவாயு, குப்பைகள் எரிக்கப்படுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. குப்பைகள் ஒழுங்காக அகற்றப்படுவதில்லை எனவும், கட்டடங்கள் கட்டப்படும்போது விதிமீறல்கள் நிகழ்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதன் காரணமாகவே மாசுபாடு ஏற்படுகிறது. டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக உள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த 50 குழுக்கள் தேசியத் தலைநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். விதிமீறல்கள் குறித்த புகார்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. எனவேதான், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது" என்றார்.