பெகுசாராய்: பிகார் மாநிலத்தில் உள்ள பச்வாரா கிராமப் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக கடித்ததால் 50 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பெண் அக்கிராமத்தைச் சேர்ந்த சாந்தி தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாந்தி தேவி வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்காக புல் அறுப்பதற்கு, வயலுக்குச் சென்ற போது இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
பெகுசாராய் மாவட்டத்தில் அதிகமான தெரு நாய்கள் தொல்லை உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இறந்தவரின் மகன் லக்ஷ்மண் கூறுகையில், ‘என் அம்மா விவசாய வயலில் இருந்து கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்குச் சென்றிருந்தார். திடீரென்று அங்கு வந்த நாய்கள் கூட்டம் அவர் மீது பாய்ந்து கடிக்கத் தொடங்கியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு செல்வதற்கு முன் பலத்த காயம் ஏற்பட்டது. அதிக இரத்தப்போக்கால் எனது தாய் இறந்துவிட்டார்’ என வேதனையுடன் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் தெரு நாய்கள் பிரச்னையை தீர்க்குமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாந்தி தேவியின் உடலை காவல் அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:மாண்டஸ் புயல்: மயிலாடுதுறையில் கடல் சீற்றம்