கோழிக்கோடு: பொதுவாக கீரிகளுக்கு மனிதர்களை பிடிப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மனித நடமாட்டம் தென்பட்டால் அதிலிருந்து தப்பிக்கவே அவைகள் முயலும். ஆனால் அப்துல் கபூர் என்பவரிடம் கீரி பாசமாக பழகி வருகிறது. அவரிடம் மட்டுமின்றி அவரது குடும்ப நபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் கூட பாசமாக பழகி வருகிறது. இந்த கீரி குட்டியை முதலில் எடுக்கும் போது இது மனிதர்களிடம் பழக பயந்துள்ளது.
அதன் பின்னர், கபூரும் அவரது குடும்பத்தினரும் இந்த கீரிக்கு பாலும், கறியும் ஊட்டியுள்ளனர், பின்னர் குடும்பத்தினருடன் நன்றாக பழக ஆரம்பித்துள்ளது. . கபூர் செல்லும் இடமெல்லாம் இந்தக் கீரியும் அவரைப் பின் தொடர்ந்து செல்கிறது. இந்த காட்சியைக் காணும் மக்கள் அந்த அழகிய உயிரினத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து அப்துல் கபூர் கூறுகையில், “ இரண்டரை மாதங்களுக்கு முன்னர், எனது வீட்டின் அருகில் மூன்று கீரிப் பிள்ளைகள் காணப்பட்டது. அதில் ஒன்றை பூனை கொன்று விட்டது, மற்றொன்றை காணவில்லை. இந்நிலையில், மீதம் இருந்த இந்த கீரிப் பிள்ளையை நான் எடுத்து அதற்கு உணவு கொடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அது என்னுடன் பழக தயாராக இல்லை. என்னை கடிக்க பல முறை முயன்றது. பூனைகளிடமிருந்து பாதுகாக்க இதை கூண்டில் அடைத்து வளர்த்தோம்.
15 நாட்களுக்கு பிறகு இது எங்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தது. இவன் என்னுடன் மார்க்கெட் வருவான், என்னுடனே படுக்கையில் படுத்து கொள்வான். இதை பற்றி வனத்துறை அலுவலர்களிடம் தெரிவிக்கையில், கீரிக்கு ஏதெனும் கஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது அது யாரையும் தாக்கினாலோ தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இவன் இதுவரை யாரையும் தாக்கியதில்லை. எல்லோருடனும் அன்பாகவே இருக்கிறான்” என்று தெரிவித்தார்.