அவுரங்காபாத்: சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யா தாக்கரே, நேற்று (பிப்.7) மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மஹால்கானில் நடைபெற்ற சிவ சம்வத் யாத்திரையின் ராமா ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதேநேரம் அதே இடத்தில் ராமாபாய் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்த நிலையில், ராமாபாய் பிறந்தநாள் விழாவின் ஊர்வலம் மற்றும் இசையினை நிறுத்துமாறு காவல் துறையினர் பீம்சைனிக் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பீம்சைனிக் ஆதரவாளர்கள், சிவ சம்வத் யாத்திரை நிகழ்ச்சி மேடையின் மீது கற்களை வீசினர். இதனால், அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த சந்திரகாந்த் காயிர் பேச்சை நிறுத்தினார்.
இதனையடுத்து ஆதித்யா தாக்கரே மேடையிலிருந்து கீழே இறங்கி, “நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் இசை இசைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடுங்கள். எனக்கு பீம்சக்தி - சிவசக்தி இரண்டுமே ஒன்றுதான்” என்றார்.
பின்னர் விழாவை முடித்த ஆதித்யா தாக்கரே, தனது காரில் அவசரமாக ஏறினார். அப்போது பீம்சைனிக் ஆதரவாளர்கள், ஆதித்யா தாக்கரேயின் கான்வாய் மீது கற்களை வீசினர். இருப்பினும், பாதுகாப்பு வீரர்களின் உதவியுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: "மோடி, அதானியின் உறவு இதுதான்" - மக்களவையில் புகைப்படங்களை காண்பித்து சம்பவம் செய்த ராகுல்!