டெல்லி:கரோனா தடுப்பூசிகள் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்திக்க இன்று டெல்லி சென்றுள்ளார்.
அவரை டெல்லியில் இருந்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதி நிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் வரவேற்றார்கள். இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
சரியாக மாலை 5 மணியளவில், முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்திக்கவுள்ளார்.
அப்போது கரோனா தடுப்பூசிகள் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக டெல்லியில் இருக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சார்பில் ரூ.50 ஆயிரம் கரோனா நிவாரண நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.