தெலங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் இன்று(டிச.01) நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஹைதராபாத் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் -இ- இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
மாநகராட்சியின் 150 வார்டுகளில் போட்டியிடும் ஆயிரத்து 122 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 74 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளார்கள். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் ஒன்பது ஆயிரத்து 101 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல்களை சீராகவும் அமைதியாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தெலங்கானா மாநிலத் தேர்தல் ஆணையர் சி.பார்த்தசாரதி கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) பதிலாக அஞ்சல் வாக்கு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக் கவசம் அணியாதவர்கள் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அலுலவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களை வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளி உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) மாநகராட்சி அமைப்பில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது, அதே நேரத்தில் துபக் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்தில், பாரதிய ஜனதா கட்சி மாநகராட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
கட்சிகளிடையே எந்தக் கூட்டணியும் இல்லாமல் இந்த தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (எம்ஐஎம்) ஆகியவையும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில், டி.ஆர்.எஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றன. எம்ஐஎம் 51 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கடந்த 2016 தேர்தலில் டிஆர்எஸ் 99 இடங்களுடன் முதலிடத்தையும், எம்ஐஎம் 44 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. பாஜகவால் நான்கு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
இதையும் படிங்க: 'அமித் ஷாவின் மருமகன் நான்...' பணம் பறிக்க வேஷம் போட்ட நபர் கைது!