இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதங்களும் அதற்கென தனித்துவமான பாரம்பரியங்களைக் கொண்டிருக்கும். இந்துக் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் தவறாமல் கலந்து கொள்ள அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவர். அதைப் போல சந்தன கூடு போன்ற ஊர்வலத்தில் கலந்து கொள்ள முஸ்லீம்கள் விருப்பப்படுவர்.
செயின்ட் லாரன்ஸ் தேவாலயம்
கர்நாடகா மாநிலம் உடுப்பி மறைமாவட்டத்தில் உள்ள அட்டூர்- கர்கலாவில் உள்ள செயின்ட் லாரன்ஸ் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ள மத வேறுபாடின்றி அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
பசுமையான பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1759 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கென சில வரலாறுகள் இருக்கின்றன. இந்த ஆலயத்தின் புனித வளாகத்தில் வரலாறு, எண்ணி பார்க்க முடியாத பல அற்புதங்கள், பக்தி என தெய்வீகம் நிறைந்து காணப்படுகிறது.
என்ன சிறப்பு?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி கடைசி வாரத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 5 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பலர் நம்பிக்கையோடு புனித லாரன்ஸை வழிப்படுகிறார்கள். இந்த விழாவில் இந்து கோயில்களைப் போலவே, இறைவனுக்கு மலர் வழிபாடு நடைபெறுகிறது.
நம்பிக்கை
இந்த ஆலயத்திற்கு வந்து புனித லாரன்ஸை வழிப்பட்டால், அவர் பக்தர்களின் வேண்டுதல்களை இறைவனிடம் பரிந்து பேசி நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது. அத்தூர்- கர்கலாவில் உள்ள ஆலயத்தில் வந்து வேண்டிக் கொள்ளாமல் வீட்டிலிருந்தே ஜெபித்தாலும் செயின்ட் லாரன்ஸ் அருள் புரிவார் என பெரும்பாலான பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிப்பதாக அந்த ஆலயத்தின் அருட்தந்தை கூறினார்.
புனித லாரன்ஸ்
திருத்தந்தை புனித 2 ஆம் சிக்ஸ்டசின் திருத்தொண்டராகப் பணிபுரிந்தவர் லாரன்ஸ். இயேசுவின் சீடர் புனித பேதுரு, புனித பவுலுக்கு அடுத்த மிகப்புகழ் வாய்ந்த மறைசாட்சி இவர் எனக் கூறப்படுகிறது. லாரன்சின் மன்றாட்டினால்தான் உரோமை நகரம் கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றது என்று கூறப்படுகிறது. இவர் பெயரால் எழுப்பப்பட்ட ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் கடவுளால் கேட்கப்படுகிறது என நம்புகின்றனர்.
கர்கலாவின் கடவுள்
அந்த வகையில் உடுப்பி கர்கலாவில் உள்ள தேவாலயத்திலும் பக்தர்கள் மத வேறுபாடின்றி குவிகின்றனர். அங்கு அதிகளவில் பக்தர்கள் வர இந்து முறைப்படி வழிபாடு செய்வது போன்ற பிம்பமும் காரணமாக இருக்கலாம். இவர் கர்கலாவின் கடவுள் எனக் குறிப்பிடப்படுகிறார்.