டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி. நடத்தும், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் எனப்படும் பன்முகப் பணியாளர்கள் தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவித்துள்ளது. இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் தேர்வு எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி, அசாமி, பெங்காலி, மராத்தி, மணிப்பூரி, குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளிலும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கும்பட்சத்தில் அதிகளவிலான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் சூழல் உருவாகும் என தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், பன்முகப் பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 11ஆயிரத்து 409 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜனவரி 18ஆம் தேதி விண்ணப்பத்திற்கான காலம் தொடங்கிய நிலையில், பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்த தேர்வுக்குத் தகுதியானவர்கள் என தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்: பன்முகப் பணியாளர்கள் (Multi Tasking Staff), மற்றும் ஹவால்தார் (Havaldar)
காலியிடங்களின் விவரம்: பன்முகப் பணியாளர்கள் (Multi Tasking Staff)– 10 ஆயிரத்து 880 பேர், ஹவால்தார் (Havaldar) - 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் என தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.சி மற்ரும் எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"India: The Modi Question" - பிபிசி தொடருக்கு பிரிட்டன் மேலவை உறுப்பினர் கண்டனம்