டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டதையடுத்து அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, மல்யுத்த சம்மேளனத்திற்கான தேர்தலை அறிவித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த தேர்தல் கடந்த டிச.21ஆம் தேதி நடைபெற்றது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்திய மல்யுத்தம் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். இது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தேர்தல் முடிவுக்குப் பின்னர் டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீருடன் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் தனது அர்ஜுனா விருதையும், கேல் ரத்னா விருதையும் திருப்பி கொடுத்தார்.
அதேபோல் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதைத் திருப்பி கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் சஞ்சய் சிங்கை தேசிய அளவிலான U15 மற்றும் U20 வயது உடையவர்களுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி அறிவிப்பில் விதிகளை மீறியதாகக் கூறப்பட்டு இடைநீக்கம் செய்தது.
இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சஞ்சய் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், சஞ்சய் சிங் விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக்கொண்டாலும், அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்ட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. முன்னதாக சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்த பின்னர் இந்தியச் சம்மேளனத்தின் விவகாரங்களை நிர்வகிக்கத் தற்காலிக குழு ஒன்றை அமைக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
அமைச்சகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் தற்காலிக குழுவை அமைத்தது. அதற்கு புபிந்தர் சிங் பஜ்வா என்பவரை தலைவராகவும், எம்.எம்.சோமயா மற்றும் மஞ்சுஷா கன்வார் ஆகியோர் புபிந்தர் சிங் பஜ்வாவுக்கு உதவியாளராகவும் நியமித்து அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டின் கிரிக்கெட் நாயகர்கள்.. பேட் கம்மின்ஸ் முதல் விராட் கோலி வரை!