கரோனா தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையை நெருங்கியுள்ளன. விரைவில், மக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதால், மருந்துகளைக் கொண்டுவருவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்திய மக்கள் தொகையுடன் கணக்கிட்டால், நிச்சயமாக கோடிக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரேநாளில் அதிகப்படியான விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கரோனா தடுப்பூசி மருந்தை கொண்டுசெல்வதற்காக வசதிகளை ஏற்படுத்திவருகின்றன. இதற்காக இந்த நிறுவனத்தின் கார்கோ விமானங்கள் சில மாற்றங்களுடன் தயார் செய்யப்பட்டுவருகின்றன.
இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங், ”உலக நாடுகளில் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஸ்பைஸ்ஜெட், ஸ்பைஸ் எக்ஸ்பிரஸ் இரண்டும் முக்கியப் பொருள்கள், மருத்துவப் பொருள்களின் போக்குவரத்தை மேம்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டன.
அந்த சமயங்களில் ஸ்பைஸ் ஜெட் பல புதுமையான முயற்சிகளையும் செய்துள்ளது. அப்போது பயணிகள் விமானத்தை சரக்கு விமானங்களாக மாற்றி மருந்துப் பொருள்களைக் கொண்டுசெல்ல ஏற்பாடுசெய்யப்பட்டது.
தற்போது அதைப் போல மருந்துப் பொருள்கள், தடுப்பூசி, ரத்த மாதிரிகளைக் கொண்டுசெல்லும் வகையில் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு கார்கோ விமானம் தயார் செய்யப்பட்டுவருகிறது” என்றார்.
ஸ்பைஸ் ஜெட், ஊரடங்கு காலம் தொடங்கப்பட்டத்திலிருந்து இதுவரை 85 ஆயிரம் டன் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் சென்று நாட்டின் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.