குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென தன் பதவியை இன்று (செப்.11) ராஜினாமா செய்தார். அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.
குஜராத்தின் முதலமைச்சராக விஜய் ரூபானி 2016ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவருக்கு முன்பு முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேலின் பதவிக்காலத்தில் அங்கு நடைபெற்ற படேல் சமூக மக்களின் போராட்டம் மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்தது.
இதையடுத்து ஆனந்திபென் ராஜினாமா செய்த நிலையில், யாரும் எதிர்பாரத விதமாக விஜய் ரூபானி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, விஜய் ரூபானி ஐந்தாண்டுகள் முதலமைச்சராக நீ்டித்த நிலையில், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த முதலமைச்சர் யார் என அனைவரும் உற்றுநோக்கும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கான பந்தயத்தில் முன்னிலையில் இருப்பவர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எனக் கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக குஜராத் துணை முதலமைச்சரான நிதின் பட்டேலின் பெயர் அடிபடுகிறது.
இவர்கள் இருவருமே படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் நிச்சயம் படேல் சமூகத்தைச் சேர்ந்தவராக தான் இருப்பார் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உ.பி தேர்தல் - நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை