டெல்லி: இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட் 2023 - 2024ஐ பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமனின் 5வது பட்ஜெட் தாக்கல் ஆகும். அதேபோல் வருகிற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், இது பிரதமர் மோடி தலைமையிலான இறுதி முழு பட்ஜெட் தாக்கல் ஆகும். இதற்காக காலை 10 மணியளவில் குடியரசுத் தலைவரை மத்திய நிதியமைச்சர் உள்பட அரசு உயர் அலுவலர்கள் நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர், தனது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத் தொடங்கினார். இதில் பேசிய அவர், “அம்ரித் காலின் முதல் பட்ஜெட் தாக்கல் இது ஆகும். இந்த பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி வரையறுக்கப்படுள்ளது.
உள்ளடக்கிய வளர்ச்சி, இறுதி இலக்கை அடையும் முயற்சி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை வெளிக்கொணர்வது, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதித்துறை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தூய்மை பாரதம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களில் இலக்கை அடைந்து விட்டோம்.
கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள், வேளாண் சார்ந்த ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் தொடங்கி விவசாயிகளுக்கு உதவிட அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார். மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்ட அம்ரித் கால் என்பது, நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டு முதல் 100வது ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளை குறிக்கிறது. இந்த வார்த்தையை கடந்த 2021, அக்டோபரில் பிரதமர் மோடி உபயோகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Budget 2023: நாட்டின் பொருளாதாரம் 7% ஆக உயரும்!