டெல்லி : வன்முறைச் சம்பவங்களால் நிலை குழைந்து காணப்படும் மணிப்பூரில் சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், சிறப்பு கூட்டத் தொடரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் குக்கி இன மக்கள் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
3 மாதங்களுக்கும் மேலாக அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்களால் 170க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் கலவரத்தால் வீடு வாசல்களை இழந்து சொந்த ஊரிலே அகதிகளாக முகாம்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கடந்த மே மாதம் குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
மணிப்பூரில் பழைய நிலை மீண்டும் கொண்டு வர மாநில மற்றும் மத்திய அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலித்த நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை (ஆகஸ்ட். 8) நடைபெற உள்ளது.
இதனிடையே இந்த மாத இறுதியில் மணிப்பூரில் சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி கட்சி ஆளுநருக்கு கடிதம் வழங்கியது. இதனிடையே சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஏறத்தாழ 20 எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குக்கி - சோமி எம்.எல்.ஏக்கள் 10 சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பத்து பேரில் 2 பேர் குக்கி மக்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒருவர் சுயேட்சை என்றும் கூறப்பட்டு உள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள சிறப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏக்களை கலந்து கொள்ள வேண்டாம் என குக்கி இன்பி மணிப்பூர், குக்கி மாணவர்கள் அமைப்பு, குக்கி மகளிர் அணி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மணிப்பூர் கலவரம்.. ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு விசாரணை... உச்ச நீதிமன்றம் உத்தரவு!