சென்னை: அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. ஆனால் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தடை குறித்து ஓபிஎஸ் தொடுத்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.
கர்நாடகா தேர்தலில் அதிமுக விவகாரங்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்புமனுவை அதிமுக சார்பாக ஏற்றதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க உள்ளார். குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் கூட்டணி தொடர்பாகவும், சமீபகாலமாக அதிமுக - பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பாகவும், அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்தும் பாஜக மேலிட தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
அதோடு, இந்திய தேர்தல் ஆணையம் விரைவாக தன்னை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்ததற்கு நன்றி என பாஜக மேலிட தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கர்நாடகா தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரை அதிமுக என மாநில தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது தொடர்பாகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீதுள்ள வழக்குகள் தொடர்பாகவும், அண்ணாமலை அடுத்ததாக அதிமுகவினருடைய சொத்துப்பட்டியலை வெளியிடுவேன் என கூறியது தொடர்பாகவும் பேச வாய்ப்புள்ளது.
ஏப்.26-ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, மேலும் பல முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால், ஓபிஎஸ்ஸையும் இணைத்துக் கொண்டு செயல்படுங்கள் என டெல்லி பாஜக மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.