டெல்லி: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மாதவராவ். இவர் நுரையீரல் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மாதவராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அவரது மகள் திவ்யாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், "அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசமான காங்கிரஸ் தலைவரும், தங்கள் அன்புக்குரிய தந்தையான மாதவ ராவ், கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். மாதவ ராவ் விரைவில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வருவார் என்று எதிர்பார்த்தோம்.
கடின உழைப்பாளியான மாதவ ராவ், பரப்புரையின் நடுவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவருக்காக பரப்புரை செய்யும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் ஆதரவைப் பெற்றீர்கள். தேர்தலில் மாதவராவிற்கு வெற்றி நிச்சயம்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆதரவாக உள்ளேன். இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி உங்களுடன் நிற்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அவர் செய்த சேவை என்றும் நினைவில் நிற்கும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.