உத்தர்காசி: உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது, கங்கோத்ரி வன உயிரியல் பூங்கா. கிட்டத்தட்ட 920 சதுர மைல் பரப்பளவில் உள்ள இந்த பூங்கா 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த பூங்கா பனிச்சிறுத்தைகளின் புகலிடமாக உள்ளது.
இங்கு பல்வேறு இனங்களைச் சேர்ந்த கரடிகள், மான்கள் மற்றும் 150 வகையான பறவைகள் உள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, கங்கோத்ரி வன உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பூங்கா திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் பூங்காவுக்கு உட்பட்ட நீலாங் பள்ளத்தாக்கு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பனிச்சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி உள்ளது. இதன் மூலம் நீலாங் பள்ளத்தாக்கில் பனிச்சிறுத்தைகள் வசித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 35க்கும் மேற்பட்ட பனிச்சிறுத்தைகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லை சாலைகள் கூட்டமைப்பு (BRO) துறையில் பணியாற்றும் மேஜர் பினு, கடந்த சில வாரங்களுக்கு முன் நீலாங் பள்ளத்தாக்கில் உள்ள பகல் நாலே என்ற இடத்தில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி உள்ளார். அந்த கேமராவில் பனிச்சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருக்கிறது. நடப்பாண்டில் முதல் முறையாக தென்பட்டுள்ள பனிச்சிறுத்தையின் நடமாட்டம் இதுவே ஆகும்.
கடந்த ஆண்டு வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ரஞ்சனா பால் என்பவர், நீலாங் பள்ளத்தாக்கில் தனது குழுவினருடன் சென்று கேமராக்களை பொருத்திய நிலையில், பனிச்சிறுத்தையின் நடமாட்டம் அதில் பதிவானது. வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் தரப்பில் நீலாங் மற்றும் ஜடாங் ஆகிய பகுதிகளில் 65 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கங்கோத்ரி வன உயிரின பூங்கா நிர்வாகம் தரப்பில் கெடார்த்தல், கோமுக் டிராக் மற்றும் பைரான் கட்டி ஆகிய இடங்களில் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1ஆம் தேதி பூங்கா திறக்கப்பட்ட பின், இந்த கேமராக்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கங்கோத்ரி வன உயிரின பூங்காவின் துணை இயக்குநர் ஆர்.என்.பாண்டே கூறுகையில், "மேஜர் பினு பொருத்திய கேமராவில் பனிச்சிறுத்தையின் உருவம் பதிவாகி உள்ளது. இதன் மூலம் இந்த பூங்காவில் பனிச்சிறுத்தைகள் மற்றும் பிற விலங்குகள் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது வினவிலங்கு ஆர்வலர்களுக்கு நற்செய்தி. கடந்த மாதம் ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை அருகே பனிச்சிறுத்தை நடமாட்டம் குறித்த காட்சிகள் வெளியானது" என்றார்.
இதையும் படிங்க: இமாச்சலில் ஒரு மதுபாட்டிலுக்கு ரூ.10 வரி விதிப்பு: பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்ன?